Stop NEET Exam – Honour TN Resolution
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இம்மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சியினருக்கும், தமிழக முதல்வருக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நீட் தேர்வை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை, இந்திய மாணவர் சங்கம் நடத்தி வருகிறது. கிட்டதட்ட ஆயிரம் பேருக்குமேல் வழக்குகள் மாணவர் சங்கத்தின் மேல் பதியப்பட்டது. நூறுக்கு மேம்பட்ட தோழர்கள் சிறை சென்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாணவர்களும், ஜனநாயக அமைப்புகளும் எதிர்பை பதிவு செய்தது. இதன் விளைவாய் தமிழக அரசு கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86,342 கருத்துகளை பரிசீலித்து 164 பக்கங்களில் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அத்தகைய தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.
ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு செப்டம்பர் 13 அன்றே கிடைக்கப்பெற்ற இத்தீர்மானத்தை ஐந்து மாதங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார். பொதுப்பட்டியலில் உள்ள கல்வி மீதான இத்தகைய மசோதாவை ஆளுநர் மாநில மக்கள் நலன் கருதி குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் செய்ய தவறியுள்ளார். இதை சட்ட மனறத்தில் அனைத்து கட்சிகளும் குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
தமிழக அரசும் அனைத்து கட்சிகளும் தற்போது பிப்ரவரி8 இத்தீர்மானத்தை மீண்டும் விவாதித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர் அதற்கு அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளதை தமிழக மாணவர்களின் சார்பில் வரவேற்கிறோம். ஆனால் தமிழர் விரோத, மதவெறி பாஜக கட்சி மட்டும் வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் உடனடியாக இத்தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் குடியரசு தலைவர் திரு இராம்நாத் கோவிந்த் அவர்களும் எட்டு கோடி தமிழக மக்களின் உணர்வை மதித்து உடனடியாக நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி வழங்கிட வேண்டும். என தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஏ.டி.கண்ணன் | மாநிலத்தலைவர் – SFI |
வீ.மாரியப்பன் | மாநிலச்செயலாளர் – SFI |