மக்களை மதரீதியாக பிளப்பதுதான் தேசத் துரோகம்!
மக்களை மதரீதியாக பிளப்பதுதான் தேசத் துரோகம்! ஆர்எஸ்எஸ் சாமியார்களுக்கு
மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்!
மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய துறவியர் மாநாட்டில் கலந்து கொண்ட சில சாமியார்கள் தமிழ்நாட்டிலும் வடமாநிலங்கள் போல முஸ்லிம் வெறுப்புணர்வை விதைக்க முனைந்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் விஷமப் பிரச்சாரத்தை இங்கும் நடத்துவதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
மன்னார்குடி ஜீயர் பேசுகையில் “முசல்மான்கள் தேசத் துரோகிகள்” என்று விஷம் கக்கியுள்ளார். அப்படி அவர்கள் என்ன துரோகம் செய்துவிட்டார்கள்? தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி- வேலைவாய்ப்பில், பொதுவாழ்வில் இடம் கிடைக்காமல் துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்.
பாதிக்கப்பட்டவர்களை துரோகிகளாக சித்தரிப்பது ஆதிக்க வாதிகளின் வழமையான தந்திரம். அதைத்தான் இந்த ஜீயர் செய்கிறார். இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளந்து நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைப்பதுதான் தேசத் துரோகம்; அதைத்தான் இந்தத் திருக்கூட்டம் செய்கிறது.
இந்த நாட்டின் இந்துக்களை வருணவாரியாகப் பிரித்து சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் அடக்கி ஒடுக்குவதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவதும் தேசத்துரோகமே. அந்த மனுஅதர்மத்தை இந்த ஜீயர் கண்டித்தது உண்டா? எல்லாரும் இந்துக்கள் என்றால் எல்லாரும் ஜீயர் ஆக முடியாதது ஏன்? அதில் ஏன் சாதி வருகிறது? இதுதான் இந்துக்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரும் துரோகம்.
மதுரை ஆதீனமோ “துறவிகள் அரசியல் பேசுவோம்” என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். ஆன்மீகம் பேச வேண்டியவர்களை அரசியல் பேச வைப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்திட்டம். அதற்கு மதுரை ஆதீனம் இரையாகியிருக்கிறார்.
அந்த அரசியல் எத்தகையது என்பதை ஜீயர் தெளிவுபடுத்தியிருக்கிறார். “அகண்ட இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்” எனப் பகிரங்கமாக ஆர்எஸ்எஸ் நிலைபாட்டை பிரகடனப்படுத்தியிருக்கிறார். இவர்களது இந்து ராஷ்டிரத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள், பெண்கள் ஆகியோரின் இடம் என்ன? அது மனுதர்மம் விதித்துள்ள அதர்மங்களே என்பதில் சந்தேகம் வேண்டாம்.
“அரசு துறவிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் தலையிடக் கூடாது; சமஸ்கிருதம் ஆரியர்கள் மொழி, தமிழ் மொழி வேறு எனக் கூறி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது” என்று கூறியிருக்கிறார் மதுரை சின்மயானந்தா ஆசிரமத்தைச் சார்ந்த சிவயோகானந்தா. அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை போன்ற தமிழ்நாடு அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கிறார். இவர்களது இந்து ராஷ்டிரம் சமூக நீதிக்கும், தமிழுக்கும் எதிரானது என்பது இப்படியாக உறுதியாகிறது.
“தமிழகத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கிறது” என்று ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் விஎச்பி பொதுச்செயலாளர் மிலித் பிராண்டே. இங்கே இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் அண்ணன் தம்பிகளாய், மாமன் மச்சான்களாய்ப் பழகி வருகிறார்கள். இயற்கைப் பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். இது தொடரக்கூடாது எனும் சங்பரிவாரத்தின் நப்பாசையே இப்படி பொய்யாய், புனைகதையாய் வெளிப்படுகிறது.
மதநல்லிணக்க மரபில் ஊறிய தமிழ்நாட்டில் பிற மத வன்மத்தை தூவி அரசியல் ஆதாயம் பெறப் பார்க்கிறது சங் பரிவாரக் கூட்டம். அதற்குத் துணை போகும் இந்தச் சாமியார்களின் விபரீதப் போக்கை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களின் சதி வேலைக்கு இரையாகி விடக் கூடாது என்று மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.
பேரா.அருணன்
க.உதயகுமார்
ஒருங்கிணைப்பாளர்கள்