News
Trending

நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் முன்வைத்த கடுமையான விமர்சனம்

நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் முன்வைத்த கடுமையான விமர்சனம்

பிருந்தா காரத்

முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்… நாட்டில் நடந்துள்ளவற்றிற்கு இந்தப் பெண்மணி மட்டுமே பொறுப்பு’ என்று வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் மூலம் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்துகள் ​​நுபுர் சர்மாவைக் கைது செய்வதற்கான தர்க்கரீதியான நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் இப்போதாவது வழிவகுத்துக் கொடுத்திடுமா?

பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவின் மீதுதான் உச்சநீதிமன்றம் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதன் விளைவாக தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தேசியத் தொலைக்காட்சியில் பேசிய பேச்சுகளுக்குப் பிறகு பல முதல் தகவல் அறிக்கைகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அமித்ஷாவின் காவல்துறை முகமது ஜுபைரைக் கைது செய்து துன்புறுத்தியதே தவிர நுபுர் சர்மா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் துணியவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பாதுகாப்பை நீட்டிப்பதில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உள்ள துணிச்சலுக்கு எல்லையில்லை என்பதையே அது தெளிவாகக் காட்டியது.  

தொலைக்காட்சியில் திருமதி.சர்மா பகிர்ந்து கொண்ட கருத்துகளின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தில்லி காவல்துறையின் துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. நுபுர் சர்மா வெளியிட்ட தகவலில் உள்ள உண்மை, வெறுப்புணர்வைத் தூண்டும் தன்மையைச் சரிபார்த்து அம்பலப்படுத்துகின்ற செயலில் ஈடுபட்ட ஜுபைரின் செயல்பாடு உண்மையில் சட்டரீதியான, தர்க்கரீதியான நடவடிக்கையே.

ஹிரிஷிகேஷ் முகர்ஜி தயாரித்த திரைப்படத்தை மேற்கோள் காட்டி ஜுபைர் 2018ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த ட்வீட்டைச் சுட்டிக்காட்டி வழக்குப் பதிவு செய்த காவல்துறை இப்போது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பழிவாங்கல் நடவடிக்கையை மறைக்க முயன்றிருக்கிறது. ஜுபைரின் ட்வீட்டிற்குப் பிறகு இந்த நான்கு ஆண்டுகளில் யாருடைய ‘மத உணர்வுகளும்’ புண்படுத்தப்பட்டிருக்கவில்லை, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தவொரு குறையும் அந்த ட்வீட் குறித்து இதுவரையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிலையில், இப்போது அந்தப் பழைய ட்வீட் குறித்து​​​​ அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக ஊடக கணக்குகள் புகார் அளித்ததன் பேரிலேயே தில்லி காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.         

முகமது ஜுபைர் என்ற பெயரில் கொலை மிரட்டல்கள் உட்பட ட்ரோலிங் தனக்கு செய்யப்பட்டது என்று நுபுர் சர்மா OpIndia என்ற வலதுசாரி செய்தி இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருந்தார். சைபர் கிரைம் பிரிவுதான் அவருக்கு வந்ததாகக் கூறப்படுகின்ற கொலை மிரட்டல்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவரொருவராலும் வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அத்தகிஅய அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய தொலைக்காட்சியில் தான் பேசிய பேச்சிற்காக பின்னர் மன்னிப்பு கோரிய நுபுர் சர்மாவின் பேச்சையே முகமது ஜுபைர் பகிர்ந்து கொண்டிருந்தார் எனும் போது ஜுபைர் மீது எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? நுபுர் சர்மாவின் அந்த மன்னிப்பு அரை மனதுடன் இருப்பதாகவும், அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இப்போது உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நுபுர் சர்மாவின் பேச்சு அடங்கிய வீடியோ முழுவதையும் பார்த்ததாகக் கூறிய உச்சநீதிமன்றம், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொனியே மிகவும் மோசமாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இப்போது நீதிபதிகள் மீதும் கொலை மிரட்டல்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்படுமா? நீதிமன்ற அமர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுமா?           

ஜுபைர் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவதற்கான தளத்தை நுபுர் சர்மாவுக்கு வழங்கிய அதே இணையதளம் வெளிப்படையாக நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான, வேண்டுமென்றே திசை திருப்பும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளது. அத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் அந்த இணையதளத்தின் தலையங்கத்தில் ‘உச்சநீதிமன்றம் இஸ்லாத்தின் பெயரால் மதவெறியர்கள் செய்த வன்முறை, கொலைகளுக்கு ஒரு பெண்ணைக் குறை கூறுவதுடன் மட்டும் நின்று விடவில்லை’ (உண்மையில் வன்முறை, கொலை, மதவெறியர்கள் அல்லது இஸ்லாம் என்று எந்தவொரு இடத்திலும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கவில்லை). இஸ்லாமியர்களைத் தூண்டுகின்ற வகையில் பேசியது சர்மாவின் தவறு என்று தெளிவுபடுத்தியுள்ள நீதிபதி சூர்யகாந்தின் கருத்தை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறையைப் பழித்து அவதூறாகப் பேசுவதாக தாங்கள் கருதுகின்றவர்களின் தலைகளை வெட்டப் போவதாக வெளிப்படையாக அறிவித்த இஸ்லாமியர்களின் தவறு அல்ல (நீதிமன்றத்தில் பேசப்படாத வார்த்தைகள்) என்பதாகவே உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில் இறுதியாக ‘நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்காக உதய்ப்பூரில் ஹிந்து ஒருவர் கொல்லப்பட்டதை சர்மாவின் தவறு என்று அறிவித்திருக்கும் உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்கள் அறிவித்துள்ள வன்முறைக்கு நுபுர் சர்மா பலியாகிவிட்டால், உண்மையில் அவர் அதற்குத் தகுதியானவர் என்றும் சொல்லக்கூடும்’ என்று பதிvஉ செய்யப்பட்டுள்ளது.     

இதுபோன்ற கருத்துகள் மக்களை வகுப்புவாத அடிப்படையில் தூண்டி விடுவதற்காக முன்வைக்கப்படுகின்ற பொய்களாகும். நீதிமன்றத்தின் கருத்துகளை வேண்டுமென்றே வகுப்புவாதப்படுத்துகின்ற இத்தகைய ‘செய்தி’ இணையதளங்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். வகுப்புவாத எதிர்வினையை நேரடியாகத் தூண்டி விடுவதாக இருக்கிற இதுபோன்ற கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பிற்கும் மேலான குற்றமாகும். ஒரு தவறான கதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, ஊதிப் பெருக்கப்படுகிறது என்பதை விளக்குவதற்காகவே OpIndia வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு இங்கே இந்த அளவிற்கு இடம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் பாஜக ஆளுகின்ற அரசாங்கங்கள் தருகின்ற மிகத் தாராளமான விளம்பரங்கள் மூலமாகவே அரசியல் ஆதரவையும், நிதியையும் பெற்று அனுபவித்து வருகின்றன.    

தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள நுபுர் சர்மாவை அனுமதித்து நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவில், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் தெரிவித்த அந்தக் கருத்துகளுக்கான இடம் கிடைக்கவில்லை. ஆயினும் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்த கருத்துகள் நுபுர் சர்மா வழக்கிற்கு அப்பால் மற்றொரு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் பாஜக அரசு, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டதாக அந்த வழக்கு இருந்தது. வழக்கைத் தொடர்வதற்குத் தேவையான அனுமதியை அரசு வழங்க மறுத்ததன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் அடிப்படையில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும், அதனைத் தொடர்ந்து நிகழ்கின்ற வன்முறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ‘புறக்கணிப்பு, ஒதுக்கி வைத்தல், நாடு கடத்தல், இனப்படுகொலை என்று இருந்து வருகின்ற பாகுபாடுகள் வழியாக இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களின் தொடக்கப் புள்ளியாக இவ்வாறான வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகள் இருக்கின்றன’ என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகளே அதன் தொடர்ச்சியாக உருவாகின்ற விளைவுகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது இங்கே நன்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.           

இன்றைய நிலைமையில் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகள் ஊடக நிறுவனங்களின் ஆதரவுடன் ‘இயல்பாக்கப்பட்டு’ சமூகங்களுக்கிடையிலான சமூக உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இந்த ‘இயல்பாக்கல்’ வெறுப்பு அடிப்படையிலான ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கண்டிப்பதற்கு அல்லது அமைதி, நல்லிணக்கத்திற்கான முறையீடுகளை மேற்கொள்வதற்கு மறுத்து வருகின்ற உயர்மட்டத் தலைவர்களால் வேண்டுமென்றே கடைப்பிடிக்கப்படுகின்ற பொறுப்பற்ற மௌனத்தை உள்ளடக்கி இருக்கிறது.

சர்வதேசப் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயலால் விளைந்த கன்னையாலாலின் காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான கொலை, அதனைத் தொடர்ந்து வெளியான மனிதாபிமானமற்ற வீடியோ போன்றவை அரசியல் தளத்தில் பரவலாகக் கண்டனத்திற்குள்ளாகின. ராஜஸ்தான் மாநில அரசு கொலையாளிகளை அதிரடியாகக் கைது செய்தது. நுபுர் சர்மாவின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு உதய்ப்பூரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்ற குழுக்கள் அந்தச் சமயத்தில் எழுந்த பரவலான சீற்றத்தைத் தங்களுக்கென்று பயன்படுத்திக் கொள்ள முயன்றன. இவ்வாறான செயல்களுக்கு பாஜக தலைவர்கள் எவராவது கண்டனம் தெரிவித்தனரா? அத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரதமர் அமைதி, நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளை விடுக்க வேண்டுமென்று ராஜஸ்தான் முதல்வர் பகிரங்கமான வேண்டுகோளை முன்வைத்தார். ஆனாலும் அவரது கோரிக்கைக்கு பலத்த மௌனமே எதிர்வினையாகி நின்றது. பிரதமர் ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை.  

சங்பரிவாரத்தை முன்னிறுத்துபவர்கள் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், அரசில் உள்ள தலைவர்களும் மௌனம் மட்டுமே காத்து வருகின்றனர். மக்களின் மனதையும். இதயத்தையும் துருவமயமாக்குகின்ற கொடூரமான முயற்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் வார்த்தைகள் மட்டுமல்லாது, செயல்களும் இணைந்து சமூகங்களுக்கிடையில் வெறுப்பு, சந்தேகம் கலந்த சூழலை உருவாக்கியிருக்கின்றன. நுபுர் சர்மா உள்ளிட்டு தொடர்புடைய செய்தி சேனல்கள், தில்லி காவல்துறை ஆகியவற்றின் மீது கடுமையான விமர்சனங்களை மிகச் சரியாகவே உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கின்ற போதிலும், அதுபோன்ற வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளியிடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு உதவுகின்ற அதிகாரத்தில் இருப்பவர்களே அதற்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.      

ஓர் அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துகிறது என்பது மிகவும் சரியான உண்மையாகும். நம்மால் அதன் மோசமான விளைவுகளை இந்தியா முழுவதிலும் காண முடிகிறது. அரசியலமைப்பு அளித்திருக்கும் உத்தரவாதங்களை நச்சுத்தன்மை மிக்க பெரும்பான்மை வகுப்புவாதத்தின் புல்டோசர் வீழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள் இஸ்லாமியவாதிகளும், அவர்களது வெறித்தனமான குழுக்களும் நுழைகின்றன. இந்த இருளை விரட்டியடிப்பதன் மூலம் தான் எதிர்கொண்டுள்ள இத்தகைய கொடுங்கனவிலிருந்து இந்தியா விழித்தெழ வேண்டும். நீதிமன்றங்களுக்கு இதில் மிகவும் முக்கியமான பங்கு இருக்கின்றது. நீதிமன்றங்களின் கூர்மையான கருத்துகள் – அவை மிக அரிதானவையாக  இருந்தாலும் – நுபுர் சர்மாவின் வழக்கில் கூறப்பட்டதைப் போன்ற வழிகளைத் தெளிவுபடுத்துவதற்கு சில சமயங்களில் உதவுகின்றன. நுபுர் சர்மாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளனர். ஒருவேளை அது நடக்கும் என்றால் இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாளாகவே அந்த நாள் அமையும். உண்மையை ஒருபோதும் யாராலும் அகற்றி விட முடியாது.      

நன்றி: என்டிடிவி இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Show More

Brinda Karat

Brinda Karat is a Politburo member of the CPI(M) and a former member of the Rajya Sabha

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Back to top button