எல்.ஐ.சி. பங்கு விற்பனை, ஊழியர்கள், சங்கத்தின் நிலைபாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று சுற்றுகிறது.
இந்த பதிவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
“எப்பொருள் யார் யார் வாயிற் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு” என்ற குறளுக்கு ஏற்ப பதிலடி அல்ல! ஏன் விவாதம் கூட அல்ல! ஆனால் ஒரு உரையாடல் நடத்த வேண்டும் என்ற அவாவின் காரணமாக இந்த பதிவு…நீண்டதாக இருந்தால் பொருத்தருள்க முதலாவது,
ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளில் 4.4 மடங்கு அதிகமாக சப்ஸ்கிரைப் ஆகியுள்ளதே? ஊழியர்கள் சங்கம் பங்குகளை விற்காதே என முழக்கமிட்டும்,வேலைநிறுத்தம் செய்தும் ஊழியர்கள் பங்குகளை வாங்க விண்ணப்பித்திருக்கிறார்கள்!சங்கத்திற்கு “பெப்பே” காட்டிவிட்டார்களே! என பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி.பங்கு விற்பனையை எதிர்த்து ஒராண்டல்ல.இராண்டல்ல… இருபத்தெட்டு ஆண்டுகள் அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் போராடி வருகின்றது.
1994 ல் எல்.ஐ.சி.பங்குகளை விற்க வேண்டும் என்ற முனைப்பில் அன்றைய அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா தலைமையில் குழு போட்டது. எல்.ஐ.சி. மூலதனத்தை ரூ.200 கோடியாக உயர்த்தி அதில் 50% பங்குகளை விற்க வேண்டும் என குழு பரிந்துரைத்தது.
மல்ஹோத்ரா குழு பரிந்துரைக்கு எதிராக மக்கள், பாலிசிதாரர்கள் ஆதரவோடு இயக்கம் நடத்தி அந்த முயற்சியை சங்கம் முறியடித்தது என்பது வரலாறு.
2019ல் மீண்டும் பதவிக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு எல்.ஐ.சி.பங்குகளை விற்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியது.
2020 ம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.அரசின் முடிவிற்கு எதிராக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை சங்கம் நடத்தியது,நடத்தியும் வருகிறது.
1994 முதல் இன்றுவரை எல்.ஐ.சி.பங்கு விற்பனைக்கு நியாயமான எந்த காரணத்தையும் அரசால் சொல்ல முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் எல்.ஐ.சி.பங்கு விற்பனை தனி மசோதாவாக கொண்டு வந்தால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் பட்ஜெட் முன்மொழிவோடு இணைத்தே கொண்டுவரப்பட்டது.
முதலில் 25%, அப்புறம் 15%,பின்னர் 10% ,இறுதியில் 5% என சொல்லி தற்போது 3.5% பங்குகளை விற்க பங்குசந்தையில் பட்டியிலிட்டுள்ளது.
எல்.ஐ.சி.யின் மூலதனம் 2001 ல் ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.6320 கோடியாக உயர்த்தி ஒரு பங்கின் முகமதிப்பு
ரூ.10 என தீர்மானித்து 632 கோடி பங்குகளாக பிரிக்கப்பட்டது.
இதில் 3.5% பங்கு என்பது 22 கோடி பங்குகளாகும். இதில்
50% ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும்..,
35% சிறுமுதலீட்டாளர்களுக்கும்…
10% பாலிசிதாரர்களுக்கும்…
5% ஊழியர்களுக்கு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
22 கோடி பங்குகளில் ஊழியர்களின் ஓதுக்கீடு 5% அதாவது 1.1.கோடி பங்குகள் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கிய பங்குகள் 15.5 லட்சம் மட்டுமே. ஒரு பங்கின் விலை ரூ.900 முதல் 950 வரை நிர்ணயிக்கப்பட்டது.
அதிகபட்சம்
ரூ.2 லட்சத்திற்கு ஒருவர் பங்குகள் வாங்கலாம். அதாவது 210 பங்குகள் மட்டுமே வாங்க முடியும்.
எல்.ஐ.சி.யில் தற்போது முதல் நிலை அதிகாரிகள் 25000,வளர்ச்சி அதிகாரிகள் 20000, ஊழியர்கள் 60000 என சுமார் 108000 பேர் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். இவர்களே ஊழியர்கள் கோட்டாவில் பங்குகள் வாங்க தகுதியுடையவர்கள்.
ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 15.5 லட்சம் பங்குகளை 7500 ஊழியர்களே வாங்கி விட முடியும். அதாவது 7500 × 210 எனில் 15.75 லட்சம் பங்குகள்.
பதிவிட்டவர் கூற்றுப்படி
30 ஆயிரம் ஊழியர்கள் வாங்கினாலே 63 லட்சம் பங்குகள் அதாவது 4.4 மடங்கு ஓவர் சப்ஸ்கிரைப். ஒருவேளை அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் வாங்கியிருந்தால் 15 மடங்கு வரை ஓவர் சப்ஸ்கிரைப் ஆகியிருக்கும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 108000 ஊழியர்கள், அதிகாரிகளில் 30000 மட்டுமே அதுவும் 30% மட்டுமே பங்குகளை வாங்க விண்ணபப்பித்துள்ளனர்.
இரண்டாவது,
ஊழியர்கள் சங்க தலைமைக்கு “பெப்பே” காட்டிவிட்டார்கள் என்பது…
தொழிற்சங்கம் என்பது ஒரு சர்வாதிகார அமைப்பு அல்ல.
தொழிலாளர்களின் உரிமைகளையும்,
நலன்களையும் பாதுகாக்க தொழிலாளர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
அரசின் கொள்கைகள்,முடிவுகள் தொழிலாளர்களுக்கு எதிராக,
தங்களது நிறுவன நலனுக்கு எதிராக இருக்கும் போது அதை எதிர்த்து அறவழியில் போராட்டங்களை சங்கங்கள் நடத்துகிறது.ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிந்திக்கவும்,
முடிவு எடுக்கும் உரிமையையும் தொழிற்சங்க சனநாயகம் வழங்கியுள்ளது. கற்றும் தருகிறது. எந்த ஒரு தொழிலாளிக்கும் யாரும் கட்டளை
இட முடியாது. ஆனால் சாதக,பாதகங்களை புரிகிற வகையில் சொல்வதோடு பாதகங்களுக்கு எதிராக போராட்டங்களையும்,இயக்கங்களையும் ஒருங்கிணைப்பது ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய கடமையாகும்.
அந்த வகையில் எல்.ஐ.சி.பங்கு விற்பனை என்பது தேசப் பொருளாதாரத்திற்கும்,நிறுவன நலனுக்கும் எதிரானது. பங்கு விற்பனை என்பது தனியார்மய நடவடிக்கையின் முதல் கட்டம் என்பதால் சங்கம் அரசின் பங்கு விற்பனை நடவடிக்கை எதிர்க்கிறது.தொடர்ந்து போராடவும் முடிவு செய்துள்ளது.
மூன்றாவது,
பதிவிட்டவர் சொல்வது போல பங்கு சந்தையில் முதலீடு செய்வது “சேமிப்பல்ல”. பங்கு சந்தை என்பது சூதாட்ட களம்.அதிக விலைக்கு வாங்கும் பங்குகள் குறையலாம். குறைந்த விலைக்கு வாங்கும் பங்குகள் அதிகமாகலாம்.லாபமும் வரலாம் நட்டமும் வரலாம்.இதுதான் பங்கு சந்தையின் அனுபவம்.அதற்காகாக வாங்கியவர்களை குறை சொல்லவில்லை. அது வாங்கியவர்களின் தனிப்பட்ட விருப்பம்…முடிவு…
நான்காவது,
எந்த ஒரு நியாயமான போராட்டமும் வீண் போவதில்லை. பங்கு விற்னைக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்களின் வலிமையான போராட்டம் காரணமாகத்தான் இன்றளவும் பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன.
மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுகின்றன. ஒருவேளை அன்று பங்கு விற்பனையை எதிர்த்து போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இன்று பொதுத்துறை வங்கிகள் என பெயர் சொல்ல எந்த வங்கியும் இருந்திருக்காது.
ஊழியர்களின் போராட்டம் காரணமாகவே 50% பங்குகளை விற்றாலும் அது பொதுத்துறை வங்கியாகவே அவ்வளவு ஏன் 33% பங்குகள் அரசின் வசம் இருந்தாலே அது பொதுத்துறை வங்கிதான் என அரசை கூற வைத்தது போராட்டத்தில் விளைந்த கனி அல்லவா!
காலங்கள் மாறும்…
மாற்றங்களும் வரும்…
அது மக்களின் முன்னேற்றத்திற்கான மாற்றமாக அமைந்திட அமைப்பாக ஒன்றிணைந்து போராட்டத்தை தொடர்வோம்….
ஆர்.தர்மலிங்கம்
பொதுச்செயலாளர்
காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்
சேலம் கோட்டம்.