ஒன்றிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி
ஒன்றிய அரசின் காவி கார்பரேட் கொள்கை இந்திய கல்வியில் மிகப்பெரிய அசமத்துவதை ஏற்படுத்தியுள்ளது.
தேசியக் கல்வி கொள்கை, நீட் போன்ற மாணவர் விரோத நடவடிக்கையால் ஏழை எளிய கிராமபுற மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.
பாஜக அரசு பொறுப்பேற்ற ஏழாண்டுகளில் கல்வியில் மிகப்பெரிய ஏற்றதாழ்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலித், பழங்குடி, சிறுபான்மை மக்கள், பெண்கள் மீதான தாக்குதலை அனைத்து வகையிலும் தொடுத்து வருகிறது. குறிப்பாக கல்வியில் திட்டமிட்டே செய்து வருகிறது.
தற்போதைய ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பில் கூட மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகையை (NSIGSE) நிறுத்தியுள்ளது. அதன் 80% விழுக்காட்டு நிதியை “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” எனும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மோடியின் விளம்பர திட்டத்திற்கு திருப்பியுள்ளது.
2015ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தால் என்ன பயன் என்று இன்று வரை மோடி பதில் அளிக்கவில்லை. மேலும் எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) எனும் ஓராண்டு படிப்பு பல மாணவிகள் மற்றும் கிராமபுற ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.
குடும்ப சூழல், பொருளாதார காரணங்களால் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு மேல் படித்து முனைவர் பட்டம் பெற இயலாத பல மாணவர்களுக்கு எம்.பில் சிறந்த படிப்பாக இருந்தது. தேசியக் கல்வி கொள்கை இப்படிப்பினை தேவையற்றது என நீக்கியுள்ளது.
பட்டப்படிப்பை நான்காண்டாக மாற்றுவது, மூன்றாம் வகுப்பு முதல் பொதுதேர்வுகள் என வடிகட்டும் முறையை கடைபிடிக்க உள்ளது. மேலும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 3% விழுக்காடுக்கு மேல் உயர்த்துவோம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மாறாக கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. மேலும் அடிப்படையான நிதியை மடைமாற்றம் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் சிவதாசன் அவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைத்து ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கையை கேள்வி எழுப்பினார்.
அதில் குறிப்பாக 2016-17 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவி தொகை பெற்றுவந்த பட்டியல் சமூக மாணவர்கள் எண்ணிக்கை 9,503 ஆக இருந்தது 2020-21ல் 3,986 ஆக குறைந்துள்ளது.
கிட்டதட்ட 58% விழுக்காடு மாணவர்கள் எண்ணிகையை குறைத்துள்ளது. முனைவர் பட்டத்திற்கு பிறகு படிக்கும் போஸ்ட் டாக்டொரல் படிப்புக்கான உதவித்தொகை பெருவோரில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி மாணவர் எண்ணிக்கை 2016-17 ஆம் ஆண்டில் 554 பேர் பெற்று வந்த எண்ணிக்கையிலிருந்து 2020-21ல் 332 ஆக குறைத்துள்ளது.
இதில் மாணவிகள் எண்ணிக்கையும் 2016-17ல் 642 என்ற எண்ணிக்கையிலிருந்து 2020-21ல் 434 ஆக குறைந்துள்ளது. அடிப்படை அறிவியலுக்கான ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையும் 83% விழுக்காடு குறைந்துள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை குறைய மாணவர்கள் படிக்க வரவில்லை என்பதல்ல திட்டமிட்டு உதவி பெறுவோர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு குறைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
கல்விக்காக அரசு செலவளிப்பது தேவையற்றது அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும் தனியார் முதலாளிகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் சாரம்சம்.
இத்தகைய கருத்தை 1998 லேயே பிர்லா-அம்பானி கல்வி கொள்கை தெரிவித்திருந்தது. இன்று அது படிப்படியாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
உலகளவில் ஆய்வுகளுக்கான மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் ஒரே தேசம் இந்தியாவாகதான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வெளியேற்றுவது மிகப்பெரிய அநீதி.
மேலும் நெட், ஜே.ஆர்.எப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கான தகுதி மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகளை முறையாக நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது. வருடத்திற்க்கு இரண்டு முறை நடைபெற்ற தேர்வை இனி ஒரு முறை நடத்தினால் போதும் என்கிறது.
ஒரு குறிப்பிட்ட பேராசிரியருக்கு வழங்கி வந்த ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்துள்ளது. அவ்வாறு குறைக்கப்பட்டால் பேராசிரியர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் ஆனால் பேராசிரியர் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது.
ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை குறைய இது ஒரு அடிப்படையான காரணமாகும். மேலும் அனைத்து மத்திய கல்வி நிலையங்களிலும் பன்மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் இத்தகைய உயர்வுக்கு எதிராக போராடியதற்க்காக மாணவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையை அந்நிர்வாகம் வழங்கியது நமக்கு தெரியும்.
முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகை 2016ல் 4,141 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிபாதியாக குறைத்து 2020ல் 2,348 என்ற எண்ணிக்கையில் வழங்கியுள்ளது.
சிறுபான்மை மக்கள் மீது சமூகத்தில் பல்வேறு தாக்குதலை தொடுப்பது மட்டுமின்றி அவர்களின் கல்வியிலும் ஒன்றிய அரசு கைவைத்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உயர் கல்வி பயில வரும் மாணவிகள் எண்ணிக்கை வெறும் 5% விழுக்காடுதான். மொத்த உயர் கல்வி பயில வரும் மாணவிகள் விழுக்காடு 49%.
இதில் அவர்களின் மத பழக்கவழக்கங்களை முன்வைத்து கர்நாடகத்தில் காவி கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டம் இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை கேள்விகுறியாக்கியுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14, 19(1), 21, 25 மற்றும் 29 ஆகியவற்றை மேற்கோள்காட்டி ஹிஜாப் குறித்த கர்நாடக கல்வித்துறையின் அரசாணை அடிப்படை உரிமைக்கு எதிரானது என சட்ட மனுவை கடந்த ஒன்பதாம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.இராமன் அவர்கள் ”ஹிஜாப் அணிவதோ, அவ்வாறான தோற்றத்தில் அவர்கள் இருப்பதோ அவர்கள் மதம் சார்ந்த அடிப்படை உரிமை, மேலும் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரலாம்” என கூறி முதலில் கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு விசாரனை முடிவு எடுக்கட்டும் என கூறியுள்ளது. ஆனால் இங்கு என்ன கேள்வி என்றால் நமது அடிப்படை உரிமைக்காக ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டும் என்பதே.
மாணவர்கள் மீது கல்வியில் நடக்கும் இத்தகைய அநீதிக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரள அனுமதிக்காமல் அவர்களை சாதிய, மதவாத உணர்வுகளுக்குள் மூழ்கடிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கருத்துகளை மாணவர்களிடம் திட்டமிட்டு புகுத்தி வருகிறது.
சமீபத்தில் புள்ளி பாய், சுள்ளி டீல் என்ற வலைதள செயலி பெண்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகவும் மிக மோசமான வேலைகள் நடந்து வந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் புகைப்படம், உருவகேலி, தொலைபேசி எண் பகிர்வது போன்ற வேலைகள் அதில் நடைபெற்றது. இதை சில ஆதிக்க சாதி இந்து ஆண்கள் மற்றும் பெண்களும் இவ்வேலைகள் செய்தது தெரியவந்தது. இவர்களின் வயது 17தான் என்பது குறிப்பிடதக்கது.
இத்தகைய மதவாத பிற்போக்கு சிந்தனையை இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்ந்த மாணவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மஹாராஸ்டிரா, உத்திர பிரதேச, ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலத்தில் மாணவர்கள், இளைஞர்களிடம் இந்த செயலி மிக வேகமாக பகிரப்பட்டுவந்த நிலையில் அனைவரின் எதிர்ப்புக்கு பிறகு இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
மகாராஸ்டிரா காவல்துறை மட்டும் சிலரை கைது செய்துள்ளது. உத்திர பிரதேச அரசோ மாறாக லவ்ஜிகாத் வழக்கு என 14 வழக்குகளை பதிவு செய்து ஒரு மாதத்திற்குள் 49 பேரை கைது செய்துள்ளது. ஆனால் இப்படியான செயலியில் பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் சில சங்கிகள் காட்சி ஊடகங்களில் வரும் முற்போக்காக உரையாடும் பெண்கள், ஊடகத்தில் நெறியாழ்கை செய்யும் பெண்கள், ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் பெண்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் குறித்த புகைப்படம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை டிவிட்டர் இணையத்தில் பகிரங்கமாக பகிறும் வேலையை செய்து வருகிறார்கள். இது உத்திரபிரதேசத்தில் வெளிப்படையாகவே நடக்கிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் அந்த மாநில அரசோ, ஒன்றிய அரசோ எடுக்கவில்லை. ஹரியானாவில் இந்துதுவவாதிகள் திறந்தவெளி பொது இடங்களில் இஸ்லாமியர்கள் நமாஸ் செய்வதை தடுத்து கோவர்தன் பூஜை செய்து அவர்களை தடுத்து வருகிறார்கள்.
கல்வியில் அவர்களின் வலதுசாரி தத்துவார்த வேலைகள் வெளிப்படையாகவும் மிகவும் வேகமாகவும் முன்னெடுத்து வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் கல்வித்துறை சார்ந்த அணிவகுப்பில் ஒன்றிய பாஜக அரசின் காவிவாத கல்விக்கொள்கையை வெளிப்படுத்தும் ஊர்தியை இடம் பெறச்செய்தது.
அதில் மனுவாத குருகுல கல்வியை இந்திய கல்வியாக உலகிற்க்கு பறைசாற்றும் வேலையை செய்தது. ஆனால் நேதாஜி, வ.உ.சி, பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதர்களுக்கு இடமளிக்கவில்லை. அவர்கள் சார்ந்த கல்வியும், வரலாறும் காவிகளை அச்சுறுத்துவதாகவே உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இப்படியான வரலாறு சென்றடைய கூடாது என்பதே இவர்களின் நோக்கம்.
மேலும் டெல்லி பல்கலை கழகத்தில் ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி அருகில் பசுவிற்கான கோசாலையை அக்கல்லூரி நிர்வாகம் அமைத்து வருகிறது. மேலும் அனைத்து கல்வி வளாகத்திலும் கோசாலை அமைக்க வேண்டும் என ஏபிவிபி பல்கலைகழகத்தில் மனு அளித்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் இதை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட் அவர்கள் நாதுராம் கோட்சே புகழை டிவிட்டரில் பதிந்து பின் எனக்கும் அதற்கும் சம்பதமே இல்லை என்றும் அது என் கணக்கே இல்லை என்றும் பொய் சொல்லி மாட்டிக்கொண்டார்.
இவர்தான் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் ஜிஹாதிகள் என குறிப்பிட்டவர். மேலும் இவரை துணைவேந்தராக நியமித்ததற்கு நன்றி தெறிவித்து அவர் எழுதிய கடிதத்தில் பல பிழைகள் இருந்ததை ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்களே குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பியதும், அதை நான் எழுதவில்லை என் அலுவலக ஊழியர் என மழுப்பியுள்ளார்.
நமது தேசத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படியானவர்கள் கையில் சிக்கி தத்தளித்து வருகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் பள்ளிப்படிப்பை, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தி வேலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் வேலையின்றி மிகப்பெறிய இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.
வேலையில்லா திட்டாடம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வேலை தேடி மக்கள் சொந்த ஊர், மாநிலங்களை விட்டு இடப்பெயர்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலங்களை சார்ந்த மக்கள் சுமார் இரண்டு கோடிபேர் தமிழகம், கேரளாவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த மாதம் பிகார், உத்திரபிரதேசத்தில் இரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கான தேர்வும் அதையொட்டிய வன்முறையும், இளைஞர் மத்தியில் உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது. அப்படியான கோபத்தை சாதியாகவும், மதமாகவும் மடைமாற்றம் செய்து வன்முறை, மோதலை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு வெற்றிகரமாக செய்து வருகிறது.
இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. கல்வி, வேலை, சமூக மேம்பாடு மதநல்லிணக்கம் குறித்த முற்போக்கான அரசியலை நோக்கி மாணவர்களையும், இளைஞர்களையும் வளர்தெடுக்க வேண்டியுள்ளது. 75 ஆண்டுகால விடுதலை இந்தியாவை பாதுகாக்க கல்வியை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டியுள்ளது
க.நிருபன் சக்கரவர்த்தி | மத்தியக்குழு உறுப்பினர் இந்திய மாணவர் சங்கம்(SFI) |