Demanding Jobs for Youths
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலகுழு சார்பாக “இளைஞர்களுக்கு வேலை கொடு” என்ற முழக்கத்தோடு சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 04 முனைகளிலிருந்து திருச்சி நோக்கி 3000 கி.மீ சைக்கிள் பயணம் வருகிற ஏப்ரல் 21 முதல் மே 01 வரை நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 21 அன்று சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா தலைமையில் பயணிக்கிறது. இந்த பயணத்தை வடசென்னை மின்ட் பஸ் ஸ்டாண்டில் திருவனந்தபுரம் மேயர் தோழர் ஆர்யா ராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைக்கிறார். இந்த பயணக்குழு வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி புறநகர் மாவட்டங்களை கடந்து மே 01 அன்று திருச்சி மாநகரை அடைகிறது.
ஏப்ரல் 20 அன்று மாலை துவக்கவிழா பொதுக்கூட்டத்துடன் கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் அவர்கள் தலைமையில் பயணிக்கிறது. இந்த பயணத்தை கேரள மாநில முன்னாள் DYFI மாநில செயலாளர் தோழர் எம்.சுராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள். இந்த பயணக்குழு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை புறநகர், மதுரை மாநகர், திண்டுக்கல், திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களை கடந்து மே 01 அன்று திருச்சி மாநகரை வந்தடைகிறது.
ஏப்ரல் 21 அன்று கோவையிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் பாலச்சந்திர போஸ் அவர்கள் தலைமையில் பயணிக்கிறது. இந்த பயணத்தை DYFI அகில இந்திய செயல் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் ஏ.ஏ.ரகீம், மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன் ஆகிய இருவரும் இணைந்து துவக்கி வைக்கின்றனர். இந்த பயணக்குழு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை கடந்து மே 01 அன்று திருச்சி மாநகரை வந்தடைகிறது.
ஏப்ரல் 20 அன்று மாலை துவக்கவிழா பொதுக்கூட்டத்துடன் புதுச்சேரியிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் அவர்கள் தலைமையில் பயணிக்கிறது. இந்த பயணத்தை தமிழ்நாடு சிபிஐ(எம்) சட்டமன்ற குழு தலைவர் தோழர் நாகை மாலி எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைக்கிறார். இந்த பயணக்குழு புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களை கடந்து மே 01 அன்று திருச்சி மாநகரை வந்தடைகிறது.
இது மட்டுமல்லாமல் தென்காசி, தேனி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய ஏழு உப பயணக்குழுக்களும் இணைகிறது.
- அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கு!
- ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிடு!
- இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங், திட்ட அடிப்படையில் நியமனம் செய்வதை தவிர்த்திடு!
- அனைத்து பணி நியமனங்களையும் நிரந்தர அடிப்படையில் செய்திடு!
- தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடு!
- ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58 ஆக மாற்றிடு!
- ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யும் நடவடிக்கையை கைவிடு!
- மனித மற்றும் வளங்களை பயன்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு!
- சிறு -குறு தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடு!
- கூட்டுறவு துறையை விரிவுபடுத்திடு!
- தனியார்துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்து!
- நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமலாக்கிடு!
- குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.21000 என சட்டம் இயற்று!
- பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்திடு!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணம் நடைபெறுகிறது. இறுதியாக மே 01 அன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த சைக்கிள் பயணம் நிறைவடைகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் DYFI அகில இந்திய தலைவரும், கேரளா மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான தோழர் பி.ஏ.முகமது ரியாஸ் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக இளைஞர்களின் வேலைக்காக, வெறுப்பு அரசியலை விரட்டி அடிக்க, தமிழக மக்களின் வாழ்வுக்காக கரம்கோர்க்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக இளைஞர்களை அழைக்கிறது.
என்.ரெஜீஸ் குமார் எஸ்.பாலா
மாநில தலைவர் மாநில செயலாளர்
Source : DYFI State committee