மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி விடுத்துள்ள இரங்கல் செய்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தராம்யெச்சூரி அதிச்சியும் துயரமும் தெரிவித்துள்ளார்.
தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களது திடீர் மறைவுச் செய்தி மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது நமது கட்சிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ஆகும். தோழர் எம்.என்.எஸ், மக்களின் புரட்சிகர போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் பல பத்தாண்டு காலம் செயலூக்கம் மிக்க பங்கினை ஆற்றியிருக்கிறார்.
அவர், ஒரு சிறந்த அமைப்பாளர், அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பொறுப்புகளை மிகவும் திறம்பட நிறைவேற்றினார்.அவரை இழந்து வாடும் நமது கட்சித் தோழர்களுக்கும் அவரது மனைவி பத்மினி மற்றும் மகன் சூர்யா ஆகியோருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீத்தாராம்யெச்சூரி கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் விடுத்துள்ள இரங்கல் செய்தி
தோழர் எம்.என்.எஸ். கட்சியின் ஒரு தன்னிகரற்ற மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்காரத் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி வருமாறு,
தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்கள் திடீரென, எதிர்பாரா விதமாக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தோழர் எம்.என்.எஸ். கட்சியின் ஒரு தன்னிகரற்ற மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைவர் ஆவார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய அனுபவத்தை பெற்றுள்ள அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் ஆவார். அவரது கருத்துக்கள், தெளிவாகவும் செறிவாகவும் கூர்மையான அரசியல் உணர்வுடனும் கூடியதாக வெளிப்படும்.
அவரது பங்களிப்பு மிக அதிகமாக தேவைப்படுகிற இந்த தருணத்தில், அவரது மறைவு கட்சிக்கு ஒரு பெரிய இழப்பு ஆகும்.
அவரது நினைவுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். ஆழமான துயரம் சூழ்ந்துள்ள இந்த தருணத்தில் அவரது மனைவிக்கும் மகனுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
Source: தீக்கதிர் நாளிதழ்