News

Bring Chidambaram Temple under TN Govt Control

சிதம்பரம் நடராஜர் கோவிலை உடனே தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பராமரிக்க வேண்டும் என் வேண்டுகோளை கடிதம் மூலம் CPI(M) மாநில செயலாளர் தோழர்..K பாலகிருஷ்ணன் கடிதம் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லை நடராஜர் ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையானதொரு ஆலயமாகும். பல நூறு ஆண்டுகளாக மன்னர்கள் மற்றும் மக்கள் அளித்த கொடைகளால் விரிவாக்கப்பட்டு, ஏராளமான சொத்துக்களை கொண்ட ஆலயமாக இன்றளவும் விளங்குகிறது. சமயக்குரவர்கள் என போற்றப்பட்ட அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட பெருமிதம் கொண்ட ஆலயமாக விளங்கியது என்பதிலிருந்தே அதன் மிகப் பழமையான வரலாற்றை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

               ஆனால் தீட்சிதர்கள் இந்த ஆலயத்தை தாங்கள் தான் கட்டியதாகவும், அதனால் அவர்கள் குறிப்பிடும் ஆகமவிதிகளின் படியே வழிபாட்டு முறைகள் அமைய வேண்டுமெனவும், ஆலய நிர்வாகத்தில் தீட்சிதர்களுக்கே முழுமையான உரிமை உள்ளதாக உரிமை கோருவதோடு, இதர சமயச் சான்றோர்களை தமிழில் பாடவும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

வடலூர் வள்ளலார் தனது திருவருட்பாவை இந்த ஆலயத்தில் அரங்கேற்ற விரும்பிய போது அதை தடுத்த தீட்சிதர்கள் அதற்கு பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதோடு, சமீபத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாட முயற்சித்த ஆறுமுக நாவலரை அனுமதிக்க மறுத்து தாக்கியது உட்பட அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் இன்றளவும் தொடர்கின்றன.

               பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த பின்னணியில், 1982 ம் ஆண்டு ஜூலை 20 ம் நாளன்று அன்றைய தமிழக அரசு, இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் 1959 ன் படி அரசின் சார்பில் ஆலயத்தை நிர்வகிப்பதற்காக ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. உடனடியாக இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் வழக்கு தொடுத்ததோடு, அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியின் பணி நியமனத்தையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அரசுக்கு கடிதம் அனுப்பினர். 

அதற்கு பிறகு இப்பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தீட்சிதர்கள் சார்பில் பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதெல்லாம் அவை நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன.

               இந்நிலையில் 2006 ம் ஆண்டு ஜூன் மாதம் தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய ரிட் மனுவை தாக்கல் செய்த தீட்சிதர்கள், அரசியல் சட்டத்தின் பிரிவு 26 ன் படியும், இந்து சமய அறநிலைய சட்டம் 107 வது பிரிவின் படியும் ஆலய நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது எனும் வாதத்தையும் முன்வைத்தனர். இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பானுமதி அவர்கள் தனது தீர்ப்பில் மிக முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார்.

அதாவது அரசியல் சட்டப்பிரிவு 26 என்பது அதற்குள் 26 (பி) மற்றும் 26 (டி) என இரண்டு உட்பிரிவுகளை கொண்டிருப்பதாகவும், 26 (பி) ஒரு குறிப்பிட்ட சமயப்பிரிவினர் தங்கள் சமய விவகாரங்களை தாங்களே நிர்வகித்து கொள்ள அனுமதிக்கும் அதே சமயம், 26 (டி) பிரிவு என்பது ஆலய நிர்வாக உரிமையை அரசுக்குத்தான் அளிக்கிறது எனும் விளக்கத்தை அளித்து தீட்சிதர்களின் ரிட் மனுவை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் உட்பட மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் நடந்த அந்த வழக்கில் அப்போதைய தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, அரசு தரப்பில் மூத்த அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் கூட விசாரணை தினத்தன்று வழக்கில் ஆஜராகி வாதிடவில்லை. அந்த அளவிற்கு அன்றைய அரசு தீட்சதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக தீர்ப்பு தீட்சதர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டு விட்டது.

               இத்தகையதொரு தீர்ப்பு கிடைத்த பின்னணியில் ஆலய நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட தீட்சிதர்கள், ஆலயத்தை ஏதோ தங்கள் சொந்த சொத்து போல பாவிப்பதோடு, தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். வரவு-செலவு விவகாரங்களில் நடைபெறும் எண்ணற்ற முறைகேடுகள், ஆலயத்திற்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி ஒரு பிரமுகர் இல்லத் திருமணத்திற்கு அனுமதிப்பது, தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பலரையும் தாக்கி அவமானப்படுத்துவது, ஆலயத்தில் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பலரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆலயத்திற்குள் இறை வழிபாட்டுக்கு வந்த பட்டியலின பெண்ணை தீட்சிதர்கள் தாக்கியதால் அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை.

               உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மட்டுமின்றி, அனைத்து கோவில் நிர்வாகங்களையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கும் உள்நோக்கம் கொண்டுள்ளதாக உள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

               எனவே, தொடரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையிலும், தமிழகத்தின் பாரம்பரியம் மிக்கதும், மிகவும் பழமையானதுமான தில்லை நடராஜர் ஆலயத்தை பாதுகாத்திடவும், ஆலய நிர்வாக பொறுப்பை முழுமையாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான வகையிலும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.              

உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை அம்மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வகையில் 1983 ம் ஆண்டு ஒரு சிறப்பு சட்டத்தை (Sri Kashi Viswanatha Temple Act 1983) பிறப்பித்து, நிர்வகித்து வருவதை போல தமிழக அரசும் அத்தகையதொரு நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்

Source: CPI(M) TN Press Release

Show More

CPI(M) TN

This is the State Unit of all India organisation of CPI(M). AN ORGANISATION WHICH IS WORKING FOR THE TOILING MASSES

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Back to top button