சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை WP (M.P) (MD) No.8466 of 2022 மற்றும் WP.M.(MD) No.7852 of 2020 இந்த வழக்கில் 04.03.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் ஜி.திருமுருகன் என்பவர் தேனி மாவட்ட மேகமலை வனச்சரகத்திற்குள் மலை மாடுகள் மேய்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நீதிபதிகள் வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்க்க மாநிலம் முழுவதும் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் தீர்ப்பை மாற்றுவதாக அறிவித்து 17.03.2022 அன்று புதிய உத்தரவை பிறப்பித்தனர். இந்த புதிய உத்தரவில் புலிகள் சரணாலயம், வனவிலங்கு சரணாலயங்கள், தேசீய பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ளனர்
.இதர வனப்பகுதிகளில் தமிழ்நாடு வனச்சட்டம் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அளித்த தீர்ப்பிற்கும் மாற்றியமைக்கப்பட்ட தீர்ப்பிற்கும் மக்களை பொருத்தவரை பெரிய வித்தியாசமில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
வன வளங்களை வளர்த்தெடுப்பதிலும், சுற்றுசூழல் பாதுகாப்பிலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த கால் நடைகள் அவசியம். பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது.
பால் உற்பத்தியிலும் கடும் சரிவு ஏற்படும். நாட்டுமாடு உற்பத்தி, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு இவை அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும். ஆடு, மாடுகளை அரை நாடோடியாக அலைந்து மேய்த்து வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான கீதாரிகள் வாழ்விழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தீர்ப்பினால் ஏற்பட இருக்கும் இத்தனை பாதிப்புக்கள் ஒருபுற மிருந்தாலும்,
ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் பிற சமூகத்தினருக்கு காடுகள் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும் சட்டம் 2006 மேய்ச்சல் உரிமையை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் இந்த சட்டம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து அரசே, மேல்முறையீடு செய்து வன உரிமைச்சட்டம் 2006 மக்களுக்கு வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பை உறுதிப்படுத்தவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வனத்துறையினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்பொழுதே கால்நடை மேய்ச்சலை தடை செய்வதுடன், லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிக்கும் நடவடிக்கை துவங்கிவிட்டது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் ஆதிவாசி மக்களிடம் இத்தகைய செயலில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, தாமதமில்லாமல் அவசர உணர்வுடன் நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்
By : Com.P.Shanmugam
Source : Tamilnadu Vivasaigal Sangam