இந்திய இராணுவத்தில் உள்ள முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வீரர்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறையை ஒன்றிய அரசு அக்னிபாத் என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்த இருக்கிறது.
தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் DYFI ஜுன் 18, 19, 20 ஆகிய தேதிகளில் போராட்டம்
இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாதம் பயிற்சி தரப்படும். 4 ஆண்டுகள் பணிபுரிந்த பின் 25 சதவிகித வீரர்களை மட்டும் தகுதியின் அடிப்படையில் துணை இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகித வீரர்களையும் வெளியேற்றுவார்கள், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
இந்த திட்டத்தை அறிவித்ததிலிருந்து நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பீகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகாண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற நினைக்கும் இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளது.
இந்திய இராணுவத்தை பலவீனம்படுத்தும் அக்னிபாத் திட்டத்தை அறிமுகம்படுத்தியதன் மூலம் நாங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்றும் பட்டம் கொடுத்த பாஜகவின் உண்மை முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்திய இராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பழைய நடைமுறையே சிறப்பாக உள்ளபோது, இந்த புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டிய தேவை இல்லை.
இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை மிச்சபடுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று ஒன்றிய அரசாங்கம் விளக்கம் அளிப்பது நாட்டுக்காக தன்னுடைய உயிரை துச்சமென நினைத்து பணியாற்றும் வீரர்களை கொச்சைப்படுத்துவதாகும்.
மேலும் இந்த அக்னிபாத் திட்டத்தை அமல்படுத்தினால் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறும் வீரர்களின் வாழ்க்கை என்னவாகும்?இந்த திட்டத்தால் வருங்காலத்தில் தேச பாதுகாப்பே கேள்விகுறியாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது.
எனவே இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 18, 19, 20 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இளைஞர்களின் கனவை நசுக்கி, இந்திய மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசின் தேசவிரோத நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் முழங்குமாறு தமிழக இளைஞர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.
என்.ரெஜீஸ் குமார் | மாநில தலைவர் |
எஸ்.பாலா | மாநில செயலாளர் |